Flotilla அனைத்துலக மனிதநேயக் குழு மீது இஸ்ரேல் தாக்குதல்; 10 மலேசியர்களும் கைது; ஐரோப்பாவில் வெடித்த போராட்டங்கள்

கோலாலம்பூர், அக்டோபர்-2 – காசாவை நோக்கி பயணம் செய்யும் Global Sumud Flotilla எனும் அனைத்துல மனிதநேய உதவிகளுக்கான தன்னார்வக் குழுக்களை, இஸ்ரேலிய இராணுவம் சிறைபிடித்துள்ளது.
இன்று காலை வரைக்குமான நிலவரப்படி, அதிலிருந்த மலேசியர்களில் 10 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று 8 பேர் கைதான நிலையில், தற்போது மேலுமிருவர் கைதானதாக Sumud Nusantara Offical எனும் கணக்கில் அவசரச் செய்தி வெளியிடப்பட்டது.
Farah Lee, Danish Nazram ஆகிய அவ்விருவரும் Grand Blu கப்பலில் பயணித்தவர்களாவர்.
“இந்த வீடியோவை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால், இஸ்ரேல் இராணுவம் எங்களை கைதுச் செய்து விட்டது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.நாங்கள் அனைத்துலக சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு அமைதியான முறையில் மனிதநேய உதவி செய்யத்தான் வந்தோம், வன்முறையைத் தூண்ட அல்ல” என்ற அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டது.
தாங்கள் கைதாகியிருக்கும் தகவல் அனைத்துலச் சமூகத்திற்கு பரப்பப்பட்டு, இஸ்ரேலுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
“நிபந்தனையின்றி எங்களை விடுவிக்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வற்புறுத வேண்டும்* என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே 17 மலேசியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களின் நிலை தற்போது கேள்விக் குறியாகாயுள்ளது.
இவ்வேளையில், இஸ்ரேலின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்து ஐரோப்பா முழுவதும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் வெடித்துள்ளன.
இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் அதில் பங்கேற்றனர்.
உயிரைப் பணயம் வைத்து, பாலஸ்தீனர்களுக்கு உதவும் நோக்கில் கடல் மார்க்கமாக இந்த Flotilla தன்னார்வ குழுவினர் சென்றுள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ள காசா மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகள் உள்ளிட்டவற்றை, சிறு சிறு படகுகள் வாயிலாக கொண்டுச் செல்லும் அக்குழுவினர், இன்று அதிகாலை காசா கரையோரத்தை அடையத் திட்டமிடப்பட்டிருந்தது.
இம்முறை மலேசியா உள்ளிட்ட 45 நாடுகளிலிருந்து 532 தன்னார்வலர்கள் 50 சிறு சிறு கப்பல்கள் மற்றும் படகுகளில் அவர்கள் பயணம் செய்கின்றனர்.



