
டிரினிடட், மே 7- போலிவியாவில் கடந்த வாரம் சதுப்பு நிலப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து தப்பிய ஐவர் முதலைகள் தங்களை சூழ்ந்துகொண்ட நிலையில் சிக்கிக் கொண்டிருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தின் கூரையில் இருந்தவாறு 36 மணி நேரம் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த தங்களின் பயங்கர அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டுள்ளார் அதன் விமானியான Pablo Andres Velarde என்பவர்.
அந்த விமான விபத்தில் உயிர் தப்பியவர்களில் மூன்று பெண்கள் மற்றும் விமானியோடு 6 வயது சிறுவனும் அடங்குவான்.
“எங்களை சுற்றிலும் முதலைகள் சூழ்ந்திருந்ததால் நடமாடுவதற்குகூட போதுமான இடமின்றி தவித்தோம், விமானத்தின் எண்ணெய் கசிவினால் சதுப்பு நிலப்பகுதி தூய்மைக் கேட்டிற்கு உள்ளாகி, குடிக்க நீர் கூட இல்லாமல் 36 மணி நேரம் இருந்தோம். இதில் கொசுவோடு பல்லித் தொல்லை வேறு” என்று பாப்லோ கூறியுள்ளார்.
இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் போலிவியாவின் வட பகுதியான Bauresசிலிருந்து டிரினிடட் நகருக்கு புறப்பட்ட சிறுரக விமானத்தின் இயந்திரம் செயல் இழந்ததால் Itannomas ஆற்றிற்கு அருகே அவசரமாக அவ்விமானம் தரையிறக்கப்பட்டது.
முதலில் அந்த விமானம் ராடாரில் தென்படவில்லை என அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குப் பின் ஒதுக்குப்புறமான பகுதியிலுள்ள மீனவர்களால் அது கண்டுப்பிடிக்கப்பட்டு, அதிலிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.