
புத்ராஜெயா, ஜனவரி 12 – மடானி அரசு, Perpaduan குழந்தை பராமரிப்பு மையங்களான Taska மற்றும் மழலையர் பள்ளிகளான Tadika ஆகியவைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகின்றது.
இதன் அடிப்படையில் அந்த பாலர் பள்ளிகளுக்கு இவ்வாண்டு 55.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் Datuk Aaron Ago Dagang தெரிவித்துள்ளார்.
செப்பாங், Bandar Baru Salak Tinggi-யிலுள்ள Tabika Perpaduan Seroja-வில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த நிதி மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை ஊக்குவித்து, பெற்றோரின் பொருளாதார சுமையை குறைப்பதற்காக வழங்கப்படுவதாக கூறினார்.
இந்த ஒதுக்கீட்டில், உணவு உதவிக்கு 24.39 மில்லியன் ரிங்கிட்டும், ஒவ்வொரு மாணவரின் அடிப்படை செலவுகளுக்கு 3.5 மில்லியன் ரிங்கிட்டும், பாலர் பள்ளியின் வசதிகளை மேம்படுத்த 20 மில்லியன் ரிங்கிட்டும், மாணவர் தொடக்கப் பொருட்களுக்கு 2.29 மில்லியன் ரிங்கிட்டும், கற்றல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு 1.93 மில்லியன் ரிங்கிட்டும், மற்றும் காப்பீட்டிற்கு 359,640 ரிங்கிட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.
2026 கல்வியாண்டின் முதல் நாளில், நாடு முழுவதும் உள்ள 1,781 Tabika Perpaduan மையங்களில் 33,307 குழந்தைகள் மற்றும் 41 Taska Perpaduan மையங்களில் 998 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த மையங்கள் அரசு நடத்தும் இலவச சேவை மையங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இவ்வாண்டு முதல் புதிய முன்பள்ளி பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் இதில் ஒற்றுமை, மரியாதை, நாட்டுப்பற்று போன்ற மதிப்புகள் சிறுவயதிலேயே ஊக்குவிக்கப்படுவதுடன், ருக்குன் நெகாரா மற்றும் தமிழ், Mandarin, Iban, கடசான் போன்ற மூன்றாம் மொழி திட்டங்களும் இணைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.



