ஷா ஆலாம், ஜனவரி-3, பண்டார் சன்வேயில் நடைபெற்ற Pinkfish புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களில் எழுவர், ecstasy போதை மாத்திரைகளை உட்கொண்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்களில் மரணமடைந்த நால்வரும் அடங்குவர் என, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) தெரிவித்தார்.
இதுவரை மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையம் மற்றும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையிலிருந்து 6 போலீஸ் புகார்களைப் பெற்றிருப்பதாக அவர் சொன்னார்.
அவ்விரு மருத்துவமனைகளுமே ஒரே மாதிரியான அறிகுறியுடன் வந்த நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தன.
அவர்களில் நால்வர் உயிரிழந்த வேளை, இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட 7 பேரும் அந்நிகழ்வில் ஒன்றாக பங்கேற்கவில்லை; மாறாக தத்தம் நண்பர்கள், குடும்பத்தார் என தனித்தனியாக கலந்துகொண்டதும் கண்டறியப்பட்டது.
விசாரணைக்காக இதுவரை அறுவரின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் என மேலும் சிலரிடம் அடுத்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்படுமென்றார் அவர்.
எனினும், அச்சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய ஆய்வுக் கூட அறிக்கைக்காகக் காத்திருப்பதாக டத்தோ ஹுசேய்ன் ஓமார் கூறினார்.