
புத்ரா ஜெயா, ஏப்ரல் 21 – அரசாங்கம் தற்போது வழக்கம்போல் செயல்பட்டு வருவதால் பி.கே.ஆர் கட்சித் தேர்தல் முடிவுற்ற பின் அமைச்சரவை மாற்றம் இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மறுத்தார். கட்சித் தேர்தல் உள்விவகாரம் என்பதால் கட்சியின் மத்திய நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தை பாதிக்கவில்லையென அன்வார் விளக்கம் அளித்தார்.
தற்போது நடைபெற்றுவருவது கட்சித் தேர்தல் என்பதால் இது தொடர்பான எந்தவொரு பிரச்னையும் புதன்கிழமை நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கலாம் என அவர் கூறினார். கடந்த இரண்டு வாரங்களில் பி.கே.ஆர் டிவிசன் தேர்தலில் கட்சியின் முக்கிய தலைவர்கள் சில புதுமுகங்களிடம் தோல்வியை தழுவியுள்ளனர்.
நிக் நஸ்மி நிக் அகமட், அக்மால் நாசிர், அடாம் அட்லி போன்ற பெரிய தலைவர்கள் தோல்வி கண்டவர்களில் அடங்குவர். அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை தனிப்பட்ட திறன் அடிப்படையிலேயே தாம் மதிப்பிடு செய்வதாகவும் அரசியல் சதுராட்டத்தின் மூலம் அல்ல என அன்வார் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை மாற்றத்தை அவர் நிராகரித்த போதிலும் வழக்கமாகவே நாட்டில் அரசியல் அரங்கில் கட்சி தேர்தலுக்குப் பின் அமைச்சரவை மாற்றம் நடைபெற்று வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அம்னோ தேர்தலுக்குப் பிறகு தனது அமைச்சரவை மாற்றத்தில் பல புதுமுகங்களை அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் நியமித்தார்.