கோலாலம்பூர், டிசம்பர்-16 – பி.கே.ஆர் கட்சியில் இணைவது பற்றி அதன் தலைமைத்துவத்துடன் பேச்சு நடத்தியதை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தெங்கு சா’ஃவ்ருல் அப்துல் அசிஸ் (Tengku Zafrul Abdul Aziz) ஒப்புக் கொண்டுள்ளார்.
எனினும் இதுவரை தாம் முடிவேதும் எடுக்கவில்லையென, முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
அதே சமயம், மாநில அளவில் பதவி பேரமோ அல்லது இடைத்தேர்தல் நடத்துவது குறித்தோ எதுவும் விவாதிக்கப்படவில்லை என்றார் அவர்.
ஒருவேளை எதிர்காலம் குறித்து முடிவெடுத்து விட்டால், அதனை நிச்சயமாக அம்னோவிடம் முறைப்படி தெரியப்படுத்துவேன் என, நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெங்கு சா’ஃவ்ருல் கூறினார்.
செனட்டர் பதவிக்காலம் முடிந்ததும் தெங்கு சா’வ்ருல் அமைச்சராகத் தொடர முடியாது; எனவே ஓர் இடைத்தேர்தலை உருவாக்கி அவரை சிலாங்கூர் மந்திரி பெசாராக்கி விட திட்டம் போடப்பட்டிருப்பதாக முன்னதாக வதந்திகள் பரவின.
தெங்கு சா’வ்ருலுக்கு வழிவிட்டு நடப்பு மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மத்திய அமைச்சராவார் என்றும் பேசப்பட்டது.
எனினும் சிலாங்கூர் சுல்தானின் அறிவுரைப்படி, ஐந்தாண்டு பதவிக் காலம் முடியும் வரை மந்திரி பெசார் பதவியில் தொடரவிருப்பதாக, அமிருடின் நேற்று தெளிவுப்படுத்தி தம் மீதான யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
சா’வ்ருலுடன் ஆரம்பக் கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்ததை முன்னதாக பிரதமரும் உறுதிப்படுத்தினார்.
மக்கள் பணியாற்ற வருவோரை, வந்தாரை வாழ வைக்கும் கொள்கை அடிப்படையில் பி.கே.ஆர் அரவணைக்கும் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.
ஆனால், ஒற்றுமை அரசாங்கக் கூட்டணிக் கட்சிகளே தலைவர்களைத் திருடுவதா என அம்னோவில் கலகக் குரல்கள் எழுந்திருப்பதை மறுக்க முடியாது.