
கோலாலாம்பூர், ஜனவரி-13 – பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து தான் ஸ்ரீ முஹிடின் யாசின் விலகியுள்ளது, அக்கூட்டணிக்கு வெளியே இயங்கி வரும் சிறிய கட்சிகளை ஒன்றிணைக்க உருவாக்கப்பட்ட ‘Ikatan Prihatin Rakyat’ கூட்டமைப்பைப் பாதித்துள்ளது.
அக்கட்சிகளில் ஒன்றான உரிமையின் தலைவர் பேராசிரியர் Dr பி. ராமசாமி அவ்வாறு கவலைத் தெரிவித்துள்ளார்.
தற்போது, பெரிக்காத்தானுக்கு பாஸ் கட்சித் தலைமையேற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெர்சாத்துவை விட அதிக உறுப்பினர்களை வைத்துள்ளதன் அடிப்படையில் பாஸ் கட்சிக்கு தகுதியேற்கும் தகுதியிருப்பது உண்மைதான்.
ஆனால், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை பெரிக்காத்தானை விட்டு இது விலக்கி விடும் என்றும், எதிர்க்கட்சியின் வலிமையை குறைக்கும் என்றும் ராமசாடி எச்சரித்துள்ளார்.
சீன மற்றும் இந்தியர்களின் அரசியல், சமூக, மத, கலாச்சார நலன்களுக்குப் போராடுவதில் பாஸ் கட்சி இன்னமும் ஆர்வமற்றதாகக் காணப்படுவதக ஒரு கருத்து நிலவுகிறது.
அது உண்மையா இல்லையா என்பது வேறு விஷயம்; ஆனால் அரசியல் உலகில் கண்ணோட்டம் என்பது தவிர்க்க முடியாதது என ராமசாமி சுட்டிக் காட்டினார்.
பாஸ் தலைமையில் எதிர்கட்சிகள் செயல்படுவது, சீனர்களையும் இந்தியர்களையும் DAP-யுடன் மேலும் நெருக்கமாக்கி விடும் என்றார் அவர்.
பெரிக்காத்தான் தலைமையில் சிறியக் கட்சிகளையும் உள்ளடக்கினால், PH-BN தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைத் தோற்கடித்து புத்ராஜெயாவைக் கைப்பற்றும் வலிமையுடன் எதிர்கட்சிகள் அடுத்தப் பொதுத் தேர்தலைச் சந்திக்கலாம் என எண்ணப்பட்டது.
ஆனால், முஹிடினின் விலகலும் பாஸ் கட்சியின் தலைமையேற்பும், கூட்டணியை குழப்பத்தில் ஆழ்த்தி, புத்ராஜெயாவைக் கைப்பற்றும் கனவை கானல் நீராக்கி விடுமோ என ராமசாமி அச்சம் தெரிவித்துள்ளார்.



