
கோலாலம்பூர், ஜனவரி-21-‘Rumah Bangsa’ உத்தேச பெருங்கூட்டணியின் கீழ் பெரிக்காத்தான் நேஷனலுடன் (PN) இணைந்து செயல்பட்டால், 16-ஆவது பொதுத் தேர்தலில் அம்னோவால் 40-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களை வெல்ல முடியும் என, பாஸ் கட்சியின் பிரமுகர் ஒருவர் கணித்துள்ளார்.
மலாய்-முஸ்லீம் கட்சிகள் ஒன்றிணைந்தால் வாக்குகள் சிதறாமல், எதிர்க்கட்சியின் நிலை வலுப்படும் என்ற வாதத்தின் அடிப்படையில் பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari அவ்வாறு கூறுகிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ 26 இடங்களை மட்டுமே வெற்றிக் கொண்டு படுதோல்வி கண்டது.
இதுவே, அம்னோ தலைவர் பரிந்துரைத்துள்ள ‘பெருங்கூட்டணி’ சாத்திமானால், கூடுதலாக இன்னும் 10 தொகுதிகளையாவது அம்னோவால் எளிதாக வென்று விட முடியும்.
தேர்தலில் மலாய்-முஸ்லீம் உணர்வின் அடிப்படையில் பெரிக்காத்தான் ஆதரவாளர்கள் அம்னோவையும் தேசிய முன்னணியையும் ஆதரிப்பர் என Fadhli கூறிக் கொண்டார்.
தற்போது அம்னோ, பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைமையிலான ஒற்றுமைக் கூட்டணி அரசாங்கத்தில் உள்ளது.
பாஸ் மற்றும் பெர்சாத்து, PN-னை வழிநடத்துகின்றன.
இந்நிலையில், அம்னோ PN-னுடன் கைக்கோர்த்தால், மலேசிய அரசியல் நிலைமையே மாறக்கூடும் என்றார் அவர்.
மலாய்-முஸ்லீம் கட்சிகளை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் நோக்கில், கடந்த வார அம்னோ பொதுப் பேரவையின் போது டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அந்த பெருங்கூட்டணி திட்டத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அம்னோ, ஒற்றுமைக் கூட்டணியிலேயே தொடருமா அல்லது PN-னுடன் மீண்டும் கைக் கோர்குமா என்பது மலேசியாவின் தேர்தல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



