
கோலாலாம்பூர், மார்ச்-19-மலேசியாவில் பெரிய அளவிலான குளோன் கார் அதாவது கார்களை மாற்றியமைக்கும் கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை மேற்கொண்ட நடவடிக்கையில், வாகனங்களின் அடையாளங்களை மாற்றி, திருடப்பட்ட கார்களை சட்டபூர்வமாக விற்கும் அக்கும்பலின் முயற்சி வெளிச்சத்திற்கு வந்தது.
மார்ச் 12 முதல் 15 வரை 6 மாநிலங்களில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில், சுமார் RM1.1 மில்லியன் மதிப்புள்ள 8 குளோன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 4 வாகனங்கள் சிங்கப்பூரில் திருடப்பட்டவையாகும்.
இதையடுத்து, 2 பெண்கள் உட்பட, 33 முதல் 60 வயதுக்குட்பட்ட 12 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
இவர்களில் 8 பேர் வாங்குபவர்கள், இருவர் இடைத்தரர்கள், ஒருவர் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பவர், மேலும் ஒருவர் சிங்கப்பூரில் தேடப்பட்டவர் ஆவர்.
அந்த சிங்கப்பூர் நபர் அந்நாட்டு அதிகாரிகளிடமே ஒப்படைக்கப்பட்டதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
பொது மக்கள் வாகனங்களை வாங்கும் போது ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும், சந்தேகமான ஒப்பந்தங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் குமார் நினைவுறுத்தினார்.



