
கோலாலம்பூர், ஜனவரி-23-MBI இணைய முதலீட்டு மோசடி குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் நேற்று மக்களவையில் கவலைத் தெரிவித்தார்.
உலகளவில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அதில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலேசியாவில் மட்டும் RM169 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இழப்பு RM300 பில்லியனைத் தாண்டியுள்ளது.
இதன் மூலம் உலகின் மிகப் பெரிய பிரமிட் வர்த்தக மோசடிகளில் ஒன்றாக இது விளங்குகிறது.
இந்நிலையில் 2020-லேயே புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், நடவடிக்கை 2025-ல் தான் Op Northern Star மூலம் தொடங்கப்பட்டது.
இதனால் பலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டதை கணபதிராவ் சுட்டிக் காட்டினார்.
இப்படியே போனால் அமுலாக்க முறை மீதான மக்களின் நம்பிக்கையும் தேய்ந்துவிடும் என்றார் அவர்.
எனவே, இணைய முதலீட்டுத் திட்டங்களின் கண்காணிப்பு, மோசடிகளை ஆரம்பத்திலேயே பேங் நெகாரா கண்டறியும் முறை, சிறப்பு டிஜிட்டல் அமுலாக்க பிரிவை அமைக்கும் பரிந்துரை, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் உதவி குறித்து நிதியமைச்சு விளக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
சீனாவில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றிருந்தாலும், மலேசியாவில் MBI upline தலைவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவது குறித்தும் கணபதிராவ் கேள்வி எழுப்பினார்.
பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மலேசியா கடுமையாகச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.



