
கோலாலம்பூர், டிசம்பர்-4 – தொழிலதிபர் Albert Tei-யிடமிருந்து சுமார் RM177,000 பணத்தை லஞ்சமாக வாங்கியதாக, பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஸ்ரீ Shamsul Iskandar Mohd Akin மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
Albert Tei-க்கு வேண்டப்பட்ட நிறுவனத்திற்கு சபாவில் கனிம சுரங்க உரிமம் பெற்றுத் தருவதற்கு கைமாறாக லஞ்சம் வாங்கியதாக, அவர் மீது 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ரொக்கமாகவும் வீட்டு உபயோகப் பொருட்கள் வடிவிலும் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
2023, 2024-ஆம் ஆண்டுகளில் அக்குற்றங்கள் புரியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் 49 வயது Shamsul அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணைக் கோரினார்.
2009 MACC சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைவாசமும், வாங்கிய லஞ்ச பணத்தை விட 5 மடங்கு அதிகத் தொகையில் அபராதமும் விதிக்கப்படலாம்.



