
ஜோகூர் பாரு, டிசம்பர் 26 -அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு ‘பாக்கெட்’ எண்ணையை விற்று வந்த ஜோகூர் பாரு உலு திராம் (ulu tiram) பகுதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றின் மீது ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்கைச் செலவீன அமைச்சான KPDN கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த வீடியோவில், 2.50 ரிங்கிட்டில் விற்க வேண்டிய 1 கிலோ எண்ணெய் பாக்கெட்டை 3.50 ரிங்கிட்டுக்கு விற்றதாக ஆடவர் ஒருவர் கூறியிருந்தார். அதனைத்தொடர்ந்து KPDN நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டு உண்மையென கண்டறியப்பட்டது.
விலை மற்றும் லாப கட்டுப்பாடு சட்டத்தை சம்பந்தப்பட்ட அந்த சூப்பர் மார்க்கெட் மீறியிருந்தால், உரிய அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் மாநில KPDN இயக்குநர் Lilis Saslinda Pornomo கூறியுள்ளார்.
மேலும், வீடியோவை இணையத்தில் பரப்புவதற்கு முன், விலை மீறல் அல்லது சலுகை பொருட்களைப் பற்றிய குறைகள் இருப்பின், பொதுமக்கள் KPDN அதிகாரப்பூர்வ தளங்கள் சேனல் வழியாக புகார் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஜோகூரில் 55 POS மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் eCOSS பயன்பாட்டின் மூலம் பாக்கெட் சமையல் எண்ணெயை தெளிவான பரிவர்த்தனையுடன் மக்கள் வாங்கி பயன்படுத்தலாம்.இந்தச் சலுகை சமையல் எண்ணெய் விநியோகத்தில் முறைகேடுகளைத் தடுப்பதோடு, இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் ஏற்படுத்தாமல் காக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



