
கோலாலம்பூர், பிப்ரவரி-15 – 2.6 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்தியப் போலிக் கோரிக்கைத் தொடர்பில் பெருநிறுவனமொன்றின் தலைமை செயலதிகாரியும், ஒரு நிறுவன இயக்குநரும் கைதாகியுள்ளனர்.
வியாழக்கிழமை புத்ராஜெயாவில் வாக்குமூலம் அளிக்க வந்த போது இருவரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைதுச் செய்தது.
60 வயது அந்த CEO-வும், 40 வயதிலான நிறுவன இயக்குநரான பெண்ணும் சேர்ந்து, நிறுவனமொன்றின் நிதியிலிருந்து அந்த 2.6 மில்லியன் ரிங்கிட்டை மீட்க போலிக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
அப்பெரும் தொகை, பின்னர் அம்மாது வேலை செய்யும் நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து பிப்ரவரி 17 வரை விசாரணைக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதே சம்பவம் தொடர்பில், முன்னதாக டத்தோ பட்டம் கொண்ட ஒருவர் உள்ளிட்ட நால்வரை MACC கைதுச் செய்தது.
அந்த ‘டத்தோ’ பிப்ரவரி 17 வரையிலும் மற்ற மூவர் நாளை வரையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.