
ஷா ஆலாம், மார்ச்-14 – வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கையாளும் பாகிஸ்தானிய முகவரிடமிருந்து கடந்த மாதம் 20,000 ரிங்கிட் இலஞ்சம் வாங்கியதாக, மலேசியா கினி செய்தியாளர் பி. நந்தகுமார் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அக்குற்றச்சாட்டை, 42 வயது நந்தகுமார் மறுத்து விசாரணைக் கோரினார்.
இதையடுத்து 10,000 ரிங்கிட் மற்றும் ஒருநபர் உத்தரவாதத்துடன் நந்தகுமாரை ஜாமீனில் விடுவித்த நிதிமன்றம், மாதமொரு முறை MACC அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்பதுடன், கடப்பிதழை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் அறிவித்தது.
பாகிஸ்தானியத் தொழிலாளர்களை கடத்தி வரும் கும்பல் தொடர்பான கட்டுரையை மலேசியா கினி இணையத் தளத்திலிருந்து நீக்கவும், இனி எந்தவொரு கட்டுரையைப் பிரசுரம் செய்யாமலிருப்பதற்கும் அந்த 20,000 ரிங்கிட் லஞ்சம் பணம் கைமாறியதாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு ஒரு ஹோட்டல் வளாகத்தில் அக்குற்றத்தைப் புரிந்ததாக நந்தகுமார் குற்றம் சாட்டப்பட்டார்.
அதே நாளில் கைதாகி விசாரணைக்காக 4 நாட்கள் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறையும், இலஞ்சப் பணத்தில் ஐந்து மடங்குத் தொகை அபராதமாகவும் விதிக்கப்படலாம்.