
கோலாலம்பூர், பிப்ரவரி-16 – மூவர் கைதாகி, 23 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதை அடுத்து, எல்லைகடந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலொன்றை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை முறியடித்துள்ளது.
41 முதல் 58 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேக நபர்களும் பண்டார் ஸ்ரீ டாமான்சாராவில் உள்ள ஒரு மாடி வீட்டில் நடத்திய சோதனையில் கைதானதாக, அத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ காவ் கோக் ச்சின் (Khaw Kok Chin) கூறினார்.
சோதனையின் போது, வீட்டில் உள்ள அறையொன்றில் methamphetamine என சந்தேகிக்கப்படும் கிரிஸ்டல் பவுடர் மற்றும் katamin அடங்கிய சீன தேயிலை பிளாஸ்டிக் பொட்டலத்தை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இது தவிர, Hyundai Starex MPV வாகனத்தின் பின்புற பயணிகள் இருக்கையில் ketamine நிரப்பப்பட்ட 250 சீன தேநீர் பொட்டலங்கள் அடங்கிய 10 வெள்ளை சாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மொத்தமாக 287 கிலோ கிராம் எடையிலான ஷாபு வகைப் போதைப் பொருட்களும், 290 கிலோ கிராம் ketamine போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
அதோடு, Mercedes Benz E240, BMW 523i, Honda City ஆகிய சொகுசு கார்களுடன் 23,000 ரிங்கிட் ரொக்கம், ஒரு ரோலேக்ஸ் கடிகாரமும் பறிமுதல் செய்யப்பட்டன.
மூன்று சந்தேக நபர்களும் உள்ளூர் மற்றும் அனைத்துலகச் சந்தைகளுக்கு போதை மருந்துகளை சேமித்து விநியோகிப்பதற்காக, கடத்தல் கும்பல் தலைவனிடமிருந்து மாதத்திற்கு 10,000 முதல் 50,000 ரிங்கிட் வரை பணம் பெற்று வந்துள்ளதும் கண்டறியப்பட்டது.
உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதற்கும் இந்தோனீசியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் முன்பு, வாடகை வீட்டை மருந்துகளுக்கான சேமிப்புக் கிடங்காக அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கடத்தல் கும்பலின் தலைவனுக்குப் போலீஸ் தொடர்ந்து வலை வீசி வருகிறது.