
RM3 மில்லியன் லஞ்சம்; இசா சாமாட்டிற்கு 6 ஆண்டு சிறை – கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தம்
புத்ரா ஜெயா, பிப்ரவரி 10 –
சரவா கூச்சிங்கில் Merdeka Palace Hotel Suites சை 12 ஆண்டுகளுக்கு முன் வாங்கியது தொடர்பில் மொத்தம் 3 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 9 லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்காக பெல்டாவின் ( Felda ) முன்னாள் தலைவர் Tan Sri முகமட் இசா சமாட்டிற்கு ( Mohd Isa Samad) விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 15.45 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை இன்று மேல் முறையீட்டு நீதிமன்றம் நிலைநிறுத்தியது. மேல் முறையீட்டு நீதிமன்றத் தலைவர் டத்தோ நோர்டின் ஹசான் ( Datuk Nordin Hassan, ) தலைமையிலான மூன்று நீதிபதிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட முகமட் இசாவுக்கு எதிரான அரசு தரப்பு வழக்கறிஞரின் முறையீடை ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ லீ சுவி செங் ( Datuk Lee Swee Seng) மற்றும் நீதிபதி டத்தோ சே முகமட் ருஷிமா கஷாலி ( Datuk Che Mohd Ruzima Ghazali) ஆகியோர் மேல் முறையீடு வழக்கை விசாரித்த இதர நீதிபதிகளாவர். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரிபுசாருமான 77 வயதுடைய முகமட் இசா தண்டனையை நிறைவேற்றுவதற்காக உடனடியாக சுங்கை பூலோ சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
இதனிடேயே உயர் நீதிமன்றம் தீர்மானித்த தண்டனை சரியானது மற்றும் பாதுகாப்பானது என்றும், நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகள் சட்ட விதிகளின் அடிப்படையிலான ஆதாரங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்றும் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு கண்டறிந்ததாக தீர்பை வாசித்த நீதிபதி நோர்டின் ஹசான் தெரிவித்தார்.



