
ஷா ஆலாம், செப்டம்பர்-24 – மிக ஆபத்தான போதைப்பொருள் வகையான ஃபெண்டனிலை (fentanyl) நாட்டுக்குள் கடத்தும் முயற்சியை, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வு துறையான JSJN வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 960 கிலோ கிராம் எடையிலான திரவம், RM30.7 மில்லியன் மதிப்புடையது என, JSJN இயக்குநர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.
உள்ளூர் மற்றும் அனைத்துலக அதிகாரிகளின் ஒத்துழைப்பால் இச்சோதனை வெற்றியில் முடிந்திருப்பதாக அவர் சொன்னார்.
வேப் திரவமாகப் பயன்படுத்தப்பட ஏதுவாக, கிள்ளான் துறைமுகம் வழியாக வேறு பெயரில் போலியாக அறிவிக்கப்பட்டு அவை கடத்திக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதையடுத்து, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவில், 22 முதல் 31 வரை வயதிலான இரு வெளிநாட்டினரும், ஓர் உள்ளூர் நபரும் கைதுச் செய்யப்பட்டனர்.
ஃபெண்டனில் (Fentanyl) போதைப்பொருளானது, மோர்ஃபின் மற்றும் ஹெரோயினை விட 100 மடங்கு வீரியமானதாகும்.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை இது பலிகொண்டுள்ளது.