
ஈப்போ, செப்டம்பர்-23,
அனுமதியின்றி மக்களிடமிருந்து வைப்புத் தொகை சேகரிப்பு, பதிவுச் செய்யாத முதலீட்டு திட்ட பிரச்சாரம் மற்றும் RM52.8 மில்லியனுக்கும் மேற்பட்ட பணச்சலவை புகார்கள் தொடர்பில், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில், திருமணமான தம்பதியர் மீது 75 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முறையே வேலையில்லாத 57 வயது கணவர் Riza Ahmad Hambadley மற்றும் விரிவுரையாளரான அவரது 55 வயது மனைவி, Wan Ziraiza Wan Ismail ஆவர்.
இருவரும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணைக் கோரினர்.
இந்த வழக்கை SSM எனப்படும் மலேசிய நிறுவன ஆணையம், மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா மற்றும் தேசிய சட்டத் துறை அலுவலகம் இணைந்து தாக்கல் செய்தன.
“Program Induk Kambing Baka Shami” என்ற ஆட்டு வளர்ப்பு முதலீட்டு திட்டத்தைச் சுற்றி குற்றச்சாட்டுகள் அமைந்துள்ளன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் RM50 மில்லியன் அபராதமும் விதிக்கப்படலாம்.
நீதிமன்றம், ஒரு நபர் உத்தரவாதத்தில் இருவருக்கும் தலா RM100,000 ஜாமீன் வழங்கி, வழக்கை நவம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.