
கோலாலம்பூர், டிசம்பர் 31 – சுகாதார வசதிக் கட்டமைப்புத் திட்டங்களில் ஏற்பட்ட தாமதம் குறித்து செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கடும் கவலைத் தெரிவித்துள்ளார்.
RMK10 எனப்படும் 10-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் 28 திட்டங்களில் 4 முடிக்கப்பட்டுள்ளன, மேலும் நான்கு திட்டங்கள் 95% நிறைவு பெற்றுள்ளன.
ஆனால் 8 திட்டங்கள் குத்தகையாளர் பிரச்னை காரணமாக பெரும் தாமதத்தை சந்தித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில், பதினோறாவது மலேசியத் திட்டத்தின் கீழ் உள்ள 51 திட்டங்களில் 7 முடிக்கப்பட்டுள்ளன, 39 திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன, 5 திட்டங்கள் கட்டுமானத்திற்கு முந்தைய நிலையில் உள்ளன.
மேலவையில் தான் கேட்ட கேள்விக்கு சுகாதார அமைச்சான KKM வழங்கிய தரவுகள் அடிப்படையில் லிங்கேஷ்வரன் அந்தக் கவலையை வெளிப்படுத்தினார்.
COVID-19 தொற்றுநோய், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பொருட்கள் விநியோக சிக்கலை, தாமதத்திற்கான காரணமாக KKM கூறியுள்ளது.
எனவே, கடுமையான கண்காணிப்பு மற்றும் விரைவான நடவடிக்கை அவசியம் என வலியுறுத்திய லிங்கேஷ்வரன், எக்காரணம் கொண்டும் மக்களின் சுகாதார சேவைகள் பாதிக்கப்படக்கூடாது என தெரிவித்தார்.



