
கோலாலம்பூர், ஜூலை-10 – 13-ஆவது மலேசியத் திட்டம் தொடர்பில் அடுத்த 14 நாட்களுக்குள் மலேசிய இந்தியர் ஒற்றுமை வட்டமேசைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் அந்த அறைகூவலை விடுத்துள்ளார்.
பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய உண்மையான, செயல்படுத்தக்கூடிய கோரிக்கைகளுடன் ஒன்றுபட்ட இந்திய பரிந்துரைகளை அதன் போது வரைவோம்.
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்கத் தயாராக இருக்கும் பட்சத்தில் நாம் கூட்டாக நமது குரலைக் கேட்க வாய்ப்பளிக்க வேண்டும்.
13-ஆவது மலேசியத் திட்டத்திற்கு முன், கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒரு குடையில் கீழ் இணைய வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இப்போது இதைச் செய்யத் தவறினால், நீண்ட காலத்திற்கு நமக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என குணராஜ் நினைவுறுத்தினார்.
அரசாங்கத்திலும் எதிர்க் கட்சியிலும் இந்தியத் தலைவர்கள் இருந்தபோதிலும் மத்திய, மாநில மட்டங்களில் செல்வாக்கு மிக்க பதவிகளை வகித்தாலும் அடிக்கடி குற்றம் சாட்டுவது அற்பமான சண்டைகளில் தொலைந்து போவதாகவும் உள்ளது.
ஆக நமக்கு இப்போது கேமராக்களும் அதிக பத்திரிகையாளர் சந்திப்புகளும் தேவையில்லை; குறிப்பாக நமக்காக பேச அதிக சமூக ஊடக வீரர்களும் தேவையில்லை.
வேண்டியதெல்லாம் இந்தியச் சமூகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான ஒற்றுமையே என குணராஜ் வலியுறுத்தினார்.