
கோலாலம்பூர், ஜூலை 30 – நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 13வது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாய மேம்பாடு தொடர்பான பல்வேறு பரிந்துரைகளை இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹாம்சா அசீசானைச் சந்தித்து தெரிவித்ததாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் சில இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாக இன்று இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் நடந்ததாக அவர் தெரிவித்தார்.
13வது மலேசிய திட்டத்தில் இந்தியர்கள் உட்பட அனைத்து இனங்களின் சமூக பொருளாதார தரமுயர்த்தும் முன்னெடுப்புகள் இருக்குமென அமிர் அம்சா கூறியதாகவும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை விவாதத்தின்போது கூடுதலான பரிந்துரைகளை முன்வைக்குமாறும் கேட்டுக் கொண்டதாக கணபதி ராவ் தெரிவித்தார்.
இச்சந்திப்பில், தம்முடன் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ஆகியோரும் கலந்துக் கொண்டதாக அவர் கூறினார்.
இதனிடையே, தங்களின் கருத்துகளை கேட்டறிந்ததற்காக அமிர் ஹாம்சாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட கணபதி ராவ், அத்திட்டத்தில் இந்தியர்களுக்கான பிரத்தியேக முன்னெடுப்புகள் உள்ளடங்கியிருக்கும் என பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருப்பதாக தெரிவித்தார்.