
கோலாலாம்பூர், செப்டம்பர்-25,
BUDI MADANI RON95 (BUDI95) திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோலை லிட்டருக்கு RM1.99 சென் எனும் மானிய விலையில் பெற தகுதியுள்ளவர்களா என்பதை, இன்று முதல், அனைத்து மலேசிய குடிமக்களும், www.budimadani.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் சரிபார்க்கலாம்.
இப்புதிய திட்டமானது பெட்ரோல் மானியங்கள் உண்மையிலேயே தகுதியான மலேசியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள் இதோ உங்களுக்காக:
1. தனிநபர் தகுதி மற்றும் 300 லிட்டர் வரம்பு
இன்னமும் செல்லுபடியாகும் (Active) கார் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் (lesen memandu) கொண்ட ஒவ்வொரு மலேசியரும் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர் ஆவர். ஒருவருக்கு மாதத்திற்கு 300 லிட்டர் RON95 மானிய விலையில் அதாவது RM1.99 விலையில் வழங்கப்படும்.
2. மற்றவரின் MyKad அட்டையை பயன்படுத்த தடை
ஒவ்வொரு கொள்முதலும் உங்கள் சொந்த MyKad அடையாள அட்டையை பயன்படுத்தியே செய்யப்பட வேண்டும். பிறரின் MyKad பயன்படுத்துவது அல்லது உங்களுடைய MyKad அட்டையைப் பிறகுக்குத் தருவது அனுமதிக்கப்படாது. இது தேசிய பதிவுத் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
3. பெட்ரோல் மீதியை அடுத்த மாதத்திற்குக் கொண்டு செல்ல முடியாது
ஒரு மாதத்தில் பயன்படுத்தாத பெட்ரோல் அளளை (baki) அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் 300 லிட்டர் வரம்பு தானாகவே மீண்டும் (reset) அமைக்கப்படும். எனவே, வழங்கப்பட்ட கோட்டாவை வீணாக்காமல் பயன்படுத்த திட்டமிடுவதே நல்லது.
4. எளிய கொள்முதல் – MyKad மட்டும் போதும்
பெட்ரோல் நிரப்பும் போது, உங்கள் MyKad அட்டையைக் கட்டணக் கருவியில் (terminal) அல்லது முகப்புகளில் scan செய்தால் போதும். பின்னர், வழக்கம்போல ரொக்கம், வங்கி அட்டை அல்லது e-wallet மூலம் பணம் செலுத்தலாம். ஓட்டுநர் உரிமப் புத்தகத்தை காட்ட வேண்டிய அவசியமில்லை.
5. ஒரு நாளில் ஒரு முறைக்கும் மேல் பெட்ரோல் வாங்கத் தடையில்லை
அரசாங்கம், தினசரி ஒருமுறை மட்டுமே இந்த மானிய விலை பெட்ரோலை நிரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு எதனையும் விதிக்கவில்லை. மாதம் முழுவதும் தேவைக்கேற்ப, ஆனால் 300 லிட்டர் வரம்பை மீறாமல், எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் பெட்ரோல் நிரப்பலாம்.
6. தகுதி சரிபார்ப்பு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள்
இணையத் தளத்தில் சரிபார்க்கும்போது, நீங்கள் தகுதிப் பெற்றவர் இல்லை என்றால், அதற்கான காரணம் காட்டப்படும்; உதாரணமாக – உங்களின் உரிமம் செயலற்றது என காட்டப்படும். இதை JPJ அல்லது JPN அலுவலகத்தில் நீங்கள் சரி செய்யலாம். தரவுகளை MyKad இயந்திரத்தால் கிரகிக்க முடியாத பட்சத்தில், பெட்ரோல் நிலையத்தில் மாற்று செயல்முறைகள் உள்ளன.
ஆகவெ, இந்த முக்கிய அம்சங்களை தெரிந்து வைத்திருப்பதன் மூலம், தகுதிப்பெற்ற ஒவ்வொரு மலேசியருக் இந்த BUDI MADANI RON95 மானிய சலுகையை அனுபவிக்கலாம்.