
புத்ராஜெயா, ஜூலை-24- SARA எனப்படும் ரஹ்மா அடிப்படை உதவித் திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் MyKad அட்டை வாயிலாக 100 ரிங்கிட் வழங்கப்படுவதை யாரும் துச்சமாக எண்ண வேண்டாம்.
பணக்காரர்களுக்கு வேண்டுமானால் அத்தொகை சிறியதாக இருக்கலாம்; ஆனால் கிராமவாசிகளுக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் அது பெரிய உதவியென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
“20,000 ரிங்கிட் 40,000 ரிங்கிட் என மாதச் சம்பளம் பெறுவோருக்கு இந்த 100 வெள்ளி துச்சமாகத் தெரியலாம்; ஆனால் எல்லாரும் அதே வசதியோடு இருப்பதில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென, நிதியமைச்சருமான அவர் சொன்னார்.
புத்ராஜெயா நிதியமைச்சு கட்டடத்தில் மாதாந்திர ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றிய போது பிரதமர் அவ்வாறு பேசினார்.
கணவன் மனைவி மற்றும் 2 பெரியப் பிள்ளைகளைக் கொண்ட ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தமாக 400 வெள்ளி கிடக்கும்; இதுவே STR எனப்படும் ரஹ்மா ரொக்க உதவியைச் சேர்த்தால் அவ்வெண்ணிக்கை 700 ரிங்கிட்டாக உயரும் என்பதை அன்வார் சுட்டிக் காட்டினார்.
மக்களுக்காக, நடப்பு நிதி ஒதுக்கீட்டில் 2 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் உயர்த்தியுள்ளது; எனவே இம்முயற்சியை துச்சமாகக் கருதி நகையாட வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.