
பெட்டாலிங் ஜெயா , டிச 1 – சமூக ஊடக செயலி மூலம் இளம் பெண்ணை ஏமாற்றியதாகக் கூறப்படும் 32 வயதுடைய ஆடவனுக்கு , ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
லோரி ஓட்டுநரான அந்த ஆடவன் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் Sharil Annuar Ahmad Mustapha இந்த தண்டனையை விதித்தார்.
அபராதத்தை செலுத்தத் தவறினால், மூன்று மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி அவனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
நவம்பர் 23 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியகத்தில் Oppo A16 கைதொலைபேசியில் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்திருந்ததாக அந்த ஆடவன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
Snapchat சமூக வலைத்தளம் மூலம் 15 வயது பெண் ஒருவரை ஏமாற்றி அப்பெண்ணுக்குச் சொந்தமான 15,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகளை பெற்றதாக அவனுக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மற்றொரு குற்றச்சாட்டும் கொண்டு வரப்பட்டது.
கோத்தா டமன்சாரா , செக்ஷன் 11இல் உள்ள ஒரு வீட்டிலிருந்த பெண்ணிடமிருந்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி அந்த நகைகளை ஏமாற்றி பெற்றுச் சென்றதாக தண்டனைச் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவனுக்கு 6,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.
இதனிடையே இந்த குற்றச்சாட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 3ஆம்தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு வருகிறது.
இந்நிலையில் தங்களது பிள்ளைகளான பள்ளி மாணவிகள் Snapchat சமூக வலைத்தளத்தில் அறிமுகமான ஆடவர்களால் ஏமாற்றப்பட்டு நகைகள் அல்லது பணம் பறிகொடுத்திருந்தால் உடனடியாக போலீசில் புகார் செய்யும்படி பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் Denis Venoth கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே சமயத்தில் தங்களது பிள்ளைகள் அந்த சமுக வலைத்தளத்தை பயன்படுத்தியிருந்தால் அதனை கவனிக்கும்படியும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் திரையில் காணும் தொலைபேசி எண்களில் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தை தொடர்புகொள்ளும்படி Denis Venoth அறைகூவல் விடுத்தார்.



