
புத்ராஜெயா, டிசம்பர்-4 – நாடு எதிர்நோக்கியுள்ள வெள்ளப் பிரச்னையை எதிர்கட்சிகள் அரசியலாக்குவதாக பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக SPM தேர்வை வெள்ளக் காலத்தில் நடத்துவதா என அவை பிரச்னையைக் கிளப்புவதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த அரசு பொதுத் தேர்வை ஒத்திவைக்குமாறுக் கூறி நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள சில எதிர்கட்சி அரசியல்வாதிகள் முயலுவதாக அன்வார் சொன்னார்.
தேர்வு சமயங்களில் வெள்ளமேற்படும் சவால்கள் இன்று நேற்று வந்ததல்ல; பல தசாப்தங்களாக நாம் சந்தித்து வரும் ஒன்றுதான்.
ஆனால், அதற்காக முக்கிய அரசாங்கத் தேர்வுகளை நாம் ஒத்தி வைத்ததில்லை என்றார் அவர்.
வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான திரங்கானுவில், 99.9 விழுக்காட்டு மாணவர்கள் எந்த தடையுமின்றி தேர்வுகளில் அமர்ந்துள்ளனர்.
அவர்கள் தற்காலிகமாக தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பரீட்சைக்குப் படிப்பதற்கான புத்தகங்களும் எழுத்து உபகரணங்களும் வெள்ளத்தில் சேதமடையும் அபாயம் குறித்தும் எதிர்கட்சிகள் தேவையில்லாத கவலையை வெளிப்படுத்தியுள்ளன.
தற்போது நடைபெற்று வருவது வெறும் வாய்மொழித் தேர்வு தான்; இதில் புத்தகங்கள் மற்றும் எழுத்து உபகரணங்களுக்கானத் தேவை எங்கிருந்து வந்தது என டத்தோ ஸ்ரீ அன்வார் கேள்வி எழுப்பினார்.
வெள்ளம் மோசமடைந்து வருவதால் இக்கட்டான சூழலுக்கு ஆளாகியுள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, SPM தேர்வை அரசாங்கம் ஒத்தி வைக்க வேண்டுமென, பெர்சாத்து கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி மாஸ் எர்மியாத்தி சம்சுடின் (Mas Ermiyati Samsudin) முன்னதாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.