கோலாலம்பூர், டிசம்பர்-30, நெட்ஃப்ளிக்ஸின் உலகப் புகழ்பெற்ற தென் கொரியத் தொடரான Squid Game-மில் மலேசியக் கொடியும் ஒரு மூலையில் தென்பட்டது குறித்து வலைத்தளவாசிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
டிக் டோக்கில் @fynryna என்ற பயனர் பதிவேற்றியுள்ள வீடியோவில், அத்தொடரின் இரண்டாம் சீசனுக்கான ஒரு காட்சிகள் தெரிகிறது.
அதில், சில முக்கியக் கதாபாத்திரங்கள் உரையாடிக் கொண்டிருக்க, பின்னால் பல்வேறு நாடுகளின் கொடிகள் தொங்குகின்றன.
வீடியோவை எடுத்த பெண், போர்ச்சுகீசிய கொடிக்கு பக்கத்தில் மலேசியக் கொடியும் இருப்பதைக் கண்டு அதை zoom செய்கிறார்.
வீடியோவுக்கு பின்னணி ஒலியாக “நான் ஒரு மலேசியனாகப் பெருமைக் கொள்கிறேன்” என்ற புகழ்பெற்ற வசனத்தையும் அவர் சேர்த்திருப்பது, வீடியோவை அடுத்துக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று விடுகிறது.
அவ்வீடியோவுக்கு இதுவரை 987,500 views-களும் 129,300 likes-களும் கிடைத்துள்ளன.
உலகின் பட்டித் தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ள ஒரு தொடரில் மலேசியக் கொடியும் இடம் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமை தானே என, வலைத்தளவாசிகள் கருத்து பதிவிட்டு மகிழ்கின்றனர்.
Squid Game தொடரின் முதல் சீசன் கோவிட்-19 பெருந்தொற்றின் போது 2021-ல் வெளியானது.
பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள சுமார் 456 போட்டியாளர்கள், ஒரு பெரிய ரொக்கப் பரிசை வெல்வதற்கான வாய்ப்புக்காக, தங்களின் உயிரைப் பணம் வைத்துப் போட்டியில் கலந்துகொள்வதே அதன் கதையாகும்.