
புத்ராஜெயா, மே-1, தனியார் சிகிச்சை மையங்கள் இன்று முதல் மருந்து மாத்திரைகளின் விலைகளைப் பார்வைக்கு வைப்பதை கட்டாயமாக்கியுள்ள அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து, தனியார் மருத்துவர்கள் அமைதிப் பேரணியை அறிவித்துள்ளனர்.
வரும் செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சின் கட்டடத்திலிருந்து பிரதமர் துறை அலுவலகம் வரை அவர்கள் ஊர்வலமாகச் செல்கின்றனர்.
காலை 10 மணிக்கு தொடங்கவுள்ள அப்பேரணியை, MMA எனப்படும் மலேசிய மருத்துவ மன்றத்தின் GP எனப்படும் பொது மருத்துவர் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
அந்த அமைதி மறியல் சட்ட திட்டங்களைப் பின்பற்றியே நடத்தப்படும்; தேவைப்படும் அனைத்து அனுமதி பெர்மிட்டுகளும் முன்கூட்டியே பெறப்படுமென, அப்பிரிவின் தலைவர் Dr பர்ம்ஜிட் சிங் குல்டிப் சிங் தெரிவித்தார்.
“நமக்கு நியாயம் வேண்டும்; பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்; எனவே மறியலில் பங்கேற்று உங்கள் குரலை கேட்கச் செய்யுங்கள்” என மறியல் போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
MMA தலைவராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள Dr திருநாவுக்கரசு ராஜுவும் அப்போஸ்டரை தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது வெறும் அடையாள மறியல் அல்ல; நாங்கள் தொடர்ந்து செயல்பட அரசாங்கத்திடம் வைக்கும் முறையீடு என்றார் அவர்.
GP மருத்துவர்களின் கட்டணம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு விவகாரங்கள் தீர்க்கப்படாமலிருக்கும் நிலையில், இப்புதிய விதிமுறையை அரசாங்கம் திணிக்க முயலுவதாக MMA சாடி வருகிறது.
மருந்து மாத்திரைகளின் விலைகளைப் பார்வைக்கு வைப்பது அனைத்து தனியார் சிகிச்சை நிலையங்களிலும் சமூக மருந்தகங்களிலும் இன்று மே 1 முதல் கட்டாயமாகும்.
சுகாதார அமைச்சு, உள்நாட்டு வாணிப – வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN-னின் கூட்டு முயற்சியில் இப்புதிய விதிமுறை அமுலுக்கு வருகிறது.
மருந்து மாத்திரைகளின் விலைகளை ஒப்பிட்டு, தங்களுக்கு கட்டுபடியானவற்றைத் தேர்ந்தெடுத்து செலவுகளை நிர்வகிக்க பொது மக்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்