
மும்பை, செப்டம்பர்-15 – இந்தியா மும்பையில், மூளைச் சாவுக்கு ஆளானதாக உறுதிச் செய்யப்பட்ட 19 வயது வாலிபன், இறுதிச் சடங்கின் போது திடீரென உடல் அசைந்து இரும்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Bhau Lachke எனும் அவ்விளைஞன் அண்மையில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தான்.
தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவனது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாகப் போராடினர்.
எனினும் அவையனைத்தும் பலனளிக்காமல் போகவே, மகன் மூளைச் சாவு அடைந்து விட்டதாகக் கூறி மருத்துவர்கள் கைவிரித்தனர்.
இதயம் நொறுங்கி போன குடும்பத்தார், இறந்துபோனதாகக் கூறப்பட்ட மகனின் சடலத்தை வீட்டுக்குக் கொண்டுச் சென்றனர்.
இறுதிச் சடங்கு தொடங்கவிருந்த போது, கிடத்தி வைக்கப்பட்ட ‘சடலம்’ இலேசாக அசைவதும் பின்னர் இரும்பியதும் கண்டு இறப்பு வீட்டில் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் இறுதிச் சடங்கை நிறுத்தி விட்டு உடனடியாக மகனை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
Lachke இன்னமும் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாகவும், முழுக்க முழுக்க சுவாசக் கருவியின் உதவியையே நம்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சரியாக மகனை பரிசோதிக்கவில்லை என குடும்பத்தார் மருத்துமனையைக் குற்றம் சாட்டிய வேளை, மூளைச் சாவின் அர்த்தத்தை அவர்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கலாம் என மருத்துவமனைத் தரப்பு தெளிவுப்படுத்தியது.