Latestமலேசியா

ஐஸ் கட்டி & உறைந்த உணவு பொருட்களின் விலை உயர்வு ஒத்தி வைப்பு

புத்ராஜெயா, ஜூலை 3 – கடந்த திங்கட்கிழமையன்று, ஐஸ் கட்டி உற்பத்தி நிறுவனமும், உறைந்த உணவுகளைத் தயாரிக்கும் நிறுவனமும் இணைந்து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வியல் செலவீன அமைச்சுடன் மேற்கொண்ட சந்திப்பிற்குப் பிறகு தங்கள் தயாரிப்புகளின் விலை உயர்வை ஒத்திவைத்துள்ளனர் என்று அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமது அலி கூறியுள்ளார்.

விற்பனை மற்றும் சேவை வரியின் (SST) விரிவாக்கப்பட்ட வரம்பு காரணமாக நிறுவனங்கள் விலைகளை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வைரலாகும் கூற்றுக்களை தெளிவுபடுத்துவதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலுக்குப் பிறகு, அவ்விரு நிறுவனங்களும் முன்னதாக திட்டமிட்டபடி ஜூலை மாதத்தில் அமல்படுத்தவிருக்கும் விலை உயர்வை தற்போது ஒத்தி வைத்துள்ளனர் என்றும் மதிப்பாய்விற்கு பிறகு புதிய தேதியை அறிவிப்பார்கள் என்றும் ஆர்மிசான் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சமூக ஊடக தகவலின் அடிப்படையில் ஐஸ் கட்டியின் விலை 3.70 ரிங்கிட்டிலிருந்து 6 ரிங்கிட்டுக்கு உயர்வு காணவிருப்பதன் அடிப்படையில், அவ்விரு நிறுவனங்களும் விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்புச் சட்டத்தின் படி, நியாயமான விலையில் பொருட்களை வழங்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நியாயமற்ற முறையில் விலைகளை உயர்த்தும் வணிகங்களை சம்பந்தப்பட்ட துறையினரிடம் உடனடியாக புகாரளிக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!