வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும்; மாதக் கடைசிக்குள் RON95 பெட்ரோல் விலை குறையும் – அன்வார் உத்தரவாதம்

ஜோகூர் பாரு, செப்டம்பர்-14,
இம்மாத இறுதிக்குள் RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு RM1.99 ஆகக் குறைக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைக் செலவினத்தைக் குறைக்கும் மடானி அரசாங்கத்தின் இந்த வாக்குறுதி நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
“சிலர் ஏன் விலை இன்னும் குறையவில்லை என்று கேட்கிறார்கள். நான் செப்டம்பர் மாதம் முடிவதற்குள் குறையும் என்று சொன்னேன். அதற்கு இன்னும் அவகாசம் இருப்பதால் பொறுமையாக இருங்கள்” என்றார் அவர்.
நிதி அமைச்சராகவும் உள்ள அன்வார், தற்போது RON95 விலை லிட்டருக்கு RM2.05 என்றாலும், உண்மையான சந்தை விலை RM2.50 முதல் RM2.60 வரை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மலேசியா உலகில் மிகக் குறைந்த எரிபொருள் விலை வழங்கும் நாடுகளில் ஒன்றாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
ஜொகூர் பாருவில் நடைபெற்ற ரிஃபோர்மாசி எழுச்சியின் 27-ஆம் நிறைவாண்டு பொதுக்கூட்டத்தில் அன்வார் அவ்வாறு பேசினார்.