
ஹைதராபாத், அக்டோபர்-26,
தென்னிந்தியாவின் ஆந்திராவில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் Love Reddy படக்குழுவினருக்கு, திரையரங்கில் அவர்கள் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இரசிகர்களோடு படத்தைப் பார்த்து விட்டு படக்குழுவினர் நன்றி தெரிவித்து கொண்டிருந்த போது, திடீரென ஓடி வந்த பெண், படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்த தெலுங்கு நடிகர் என்.டி ராமசாமியை சரமாரியாகத் தாக்கினார்.
சட்டென ராமசாமி கன்னத்தில் பளாரென அறைந்தும் விட்டார்.
இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.
படத்தில் காதல் ஜோடிக்கு குறுக்கே நிற்கும் அவரின் கதாபாத்திரத்தைக் குறிக்கும் விதமாக, “அவர்களைச் சேர விட மாட்டாயா” என கேட்டுக் கொண்டே வில்லன் நடிகரை அப்பெண் தாக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அப்பெண்ணை அருகிலிருந்தவர்கள் தடுத்த போதும், அவர்களை மீறி கொண்டு அப்பெண் தொடர்ந்து அடிக்கப் பாய்ந்தார்.
அப்பெண் தன்னை எதற்காக அடித்தார் என புரியாமல் வில்லன் நடிகர் ராமசாமி திகைத்தும் திணறியும் போய் விட்டார்.
பின்னர் ஒருவழியாக அப்பெண்ணை ஆசுவாசப்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
வைரலான வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், சினிமா கதாபாத்திரங்களைப் பார்த்து அதுதான் நடிகர்களின் உண்மையான குணம் என நினைத்துக் கொள்ளும் இரசிகர்கள் இன்றைக்கும் இருப்பதை எண்ணி ஆச்சரியப்பட்டனர்.
அதே சமயம், எந்த அளவுக்கு வில்லன் நடிப்பை கொட்டியிருந்தால், ராமசாமியை அப்பெண் அடிக்க பாய்ந்திருப்பார் என பாராட்டுவோரும் இருக்கவே செய்கின்றனர்.