
தூத்துக்குடி, டிசம்பர்-21,உலகப் புகழ்பெற்ற அறுபடைவீடுகளில் ஒன்றான தமிழகத்தின் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இருவரைத் தாக்கிக் கொன்ற யானை தெய்வானை வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்புள்ளது.
பழையபடி தனது சாந்தமான இயல்புக்கு மாறியுள்ள தெய்வானை, புதியப் பாகனுடன் கொஞ்சும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அதில் இனி யாரையும் தாக்குவாயா? என பாகன் வேடிக்கையாகக் கேட்க, தாக்க மாட்டேன் என பதில் சொல்வது போல் யானை தெய்வானை தலையை ஆட்டியது.
அதுவும் தும்பிக்கையால் தனது இடது காதைப் பிடித்துக் கொண்டே தெய்வானைத் தலையை ஆட்டியது, மன்னிப்புக் கேட்பது போலிருந்தது.
யானையின் அச்செயல் பார்ப்போரை நெகிழச் செய்த நிலையில், அது சாந்தமடைந்தது குறித்து பலரும் மகிழ்ச்சித் தெரிவித்தனர்.
நவம்பர் 28-ந் தேதி யானை தெய்வானைத் தாக்கியதில் யானை பாகன் மற்றும் அவரது உறவினர் ஒருவர் உயிரிழந்தனர்.
கோயிலுக்கு வருவோரின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த தெய்வானையின் திடீர் ஆவேசம் பக்தர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.