
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – மலேசியத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP, 13-ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் இந்தியச் சமூகத்தின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை வலுப்படுத்த உறுதிச் செய்துள்ளது.
அவ்வகையில் INSKEN எனப்படும் தேசியத் தொழில்முனைவோர் நிறுவனம், மித்ராவுடன் இணைந்து மலேசிய இந்தியச் சமூக தொழில்முனைவோர் திட்டமான MICEP-ச் செயல்படுத்தப்படுவதாக அதன் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.
இந்தத் திட்டம், கட்டமைக்கப்பட்ட பயிற்சி, டிஜிட்டல் உருமாற்றம் மற்றும் மூலதன நிதி அணுகல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இதன் கீழ், 450 பங்கேற்பாளர்கள் அடிப்படை தொழில்முனைவோர் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு பாடநெறிகளை கற்றுக்கொண்டு வருகின்றனர்.
பயிற்சியை முடித்தவர்கள், நான்கு மாத தீவிர வணிக வழிகாட்டுதலையும், அதிகபட்சம் தலா RM20,000 வரை வணிக நிதியுதவியையும் பெறுவார்கள்.
கூடுதலாக, தொழில்முனைவோர்களுக்கு இணைய விற்பனையை விரிவுபடுத்த, TEKUN Nasional நிறுவனம் நவீன தொழில்நுட்பத்துடன் TikTok Shop ஸ்டுடியோக்களை வழங்குகிறது.
இத்திட்டங்கள் மலேசியா MADANI நோக்கத்துக்கு ஏற்ப, போட்டித்திறனை மேம்படுத்தி, சமூக முன்னேற்றத்தை விரைவுபடுத்தி, வருவாய் இடைவெளியைக் குறைக்கும் என ரமணன் தெரிவித்தார்.