
குவாலா திரெங்கானு, மே-11 – திரங்கானுவில் பல இடங்களில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான எச்சரிக்கைப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இத்தகைய எச்சரிக்கை அறிவிப்புகள் சற்று வெளிப்படையாகவே இருப்பதாக சிலர் கருதினாலும், மாநில அரசு அந்நடவடிக்கையைத் தற்காத்து பேசியுள்ளது.
மக்கள் மத்தியில் ஓரினச் சேர்க்கை குறித்து வெறுப்புணர்வைத் தூண்டுவதே தங்களின் நோக்கம் என, வீடமைப்பு, ஊராட்சி, மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ வான் சுகாய்ரி வான் அப்துல்லா கூறினார்.
ஓரினச் சேர்க்கை என்பது ஒரு ‘அசிங்கம்’, ‘தவறு’, ‘ஒதுக்கப்பட வேண்டியது’ என்ற கருத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க விரும்புகிறோம் என்றார் அவர்.
இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப, எந்தவோர் ஒழுங்கீனச் செயல்களிலிருந்தும் நகரங்கள் விடுபட்டிருப்பதை உறுதிச் செய்யவே, இது போன்ற எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
அதனால் தான், பொது மக்கள் குறிப்பாக உயர் கல்விக் கூடங்கள் போன்று இளையோர் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகே இந்த எச்சரிக்கைப் பலகைகள் பொருத்தப்படுகின்றன என்றார் அவர்.
UMT எனப்படும் மலேசிய திரங்கானு பல்கலைக் கழகத்தின் முதன்மை நுழைவாயிலுக்கு வெளியே அத்தகைய எச்சரிக்கைப் பலகை பொருத்தப்பட்டிருக்கும் படம் முன்னதாக வைரலாகியிருந்தது.