
கோலாலம்பூர், மார்ச் 7 – ரி.ம 500,000 லஞ்சம் கேட்டது மற்றும் அதனை பெற்றது தொடர்பான சந்தேகத்தின் பேரில் செபூத்தே (Seputeh) நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கின் (Teresa Kok) முன்னாள் சிறப்பு அதிகாரி மற்றும் மற்றொரு தனிப்பட்ட நபரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான
MACC தடுத்து வைத்துள்ளது.
கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பல பள்ளிகளுக்கு விவேக வெண் பலகைகளை வழங்குவதற்காக RM1.5 மில்லியன் நிதிக்கான விண்ணப்பத்தை அங்கீகரிக்க உதவியதற்காக, கடந்த ஆண்டு அந்த நபர்கள் லஞ்சம் கேட்டு பெற்றதாக நம்பப்படுகிறது என்று MACC க்கு அணுக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்குத் தேவையான அளவு மற்றும் விவரக்குறிப்புகளின்படி பொருட்கள் வழங்கப்பட்டதா என்பதை விசாரணை தீர்மானிக்கும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை இரவு புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக அந்த இருவரும் வந்தபோது கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டதை MACC விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குனர் ஜைனுல் டாருஸ் (Zainul Darus ) உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கு 2009 ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் 16 ஆவது விதியின் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
சந்தேக நபர்களுக்கு நேற்று முதல் நான்கு நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் இர்சா சுலைகா ரோஹனுதீன் ( Irza Zulaikha Rohanuddin) உத்தரவிட்டார்.