Latestஉலகம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா & போர்ச்சுகல்; கொதிக்கும் இஸ்ரேல்

 

லண்டன், செப்டம்பர்-22,

பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல் ஆகிய 4 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக ஒரே நாளில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.

பல தசாப்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மேற்கத்திய நாடுகளின் கொள்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால், இஸ்ரேல் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளது.

முதலில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) ஞாயிறு மாலை அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார்.

இது தாமதமான அங்கீகாரம் என்றாலும், காசாவில் நிலைமை மோசமாகி வருவதால் லண்டன் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

காசாவிலும் மேற்குக் கரையிலும் அழிவுகள் தொடருவதால், ‘இரண்டு நாடுகள்’ என்ற சமரசத் தீர்வை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த முடிவின் நோக்கம் என ஸ்டார்மர் கூறினார்.

என்ற போதும், ஹமாஸ் தலைவர்களுக்கு மேலும் தடையை அறிவித்த ஸ்டார்மர், அவர்களுக்கு பாலஸ்தீனத்தின் எதிர்காலத்தில் இடமில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

UK-வின் இவ்வறிவிப்பு பாலஸ்தீனத்தின் தன்னாட்சி உரிமையை உறுதிச் செய்கிறது.

இந்த அங்கீகாரம் உடனடியாக ஒரு நாட்டை உருவாக்காது, ஆனால் சமாதான செயல்முறையைத் தொடரச் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வேளையில், பிரிட்டனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா, போர்சுகல் ஆகியவையும் நேற்று சுதந்திர பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்தன.

இந்த அங்கீகாரமானது, இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுத்து காசா போரை முடிவுக்குக் கொண்டு வருமென அவை எதிர்பார்க்கின்றன.

ஆனால், பிரிட்டனின் செயல் “தீவிரவாதத்திற்கான விருது” என இஸ்ரேல் கடுமையாகக் கண்டித்துள்ளது.

பாலஸ்தீன அதிகார தரப்போ, இதை சுதந்திரத்திற்கான நம்பிக்கைச் செய்தி என வரவேற்றுள்ளது.

ஐநா பொதுப் பேரவையின் வருடாந்திர உயர் மட்ட அமர்வு இன்று பின்னேரம் தொடங்குவதால், மேலும் பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!