
பிறை, ஏப்ரல்-21- பினாங்கு, பிறை சட்டமன்றத் தொகுதியில் முதன் முறையாக “தமிழ்ப் புத்தாண்டு திருவிழா” விமரிசையாக நடந்தேறியது.
சித்திரைப் புத்தாண்டை ஒட்டி ஏப்ரல் 19-ஆம் தேதி Chai Leng Park பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற அவ்விழாவுக்கு, அத்தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ தலைமைத் தாங்கினார்.
குடும்ப உணர்வோடு உள்ளூர் மக்களை ஒன்றிணைக்கும் விழாவாக அதனை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தவர்களுக்கும், திரளாக வந்து கலந்துகொண்ட மக்களுக்கும் அவர் நன்றிக் கூறினார்.
ஒருமைப்பாட்டை வளர்ப்பதோடு நம் இனக் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் துணைப்புரியும் என்றார் அவர்.
தமிழ் கலைப் பண்பாட்டு அம்சங்களைப் பிரதிபலிக்கும் பலவேறு அங்கங்கள் அவ்விழாவுக்கு மெருகூட்டின.
தமிழினத்தின் தொன்மையான அடையாளமான பறையிசை, புலியாட்டம், கிராமிய நடனம், கும்மியாட்டம் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
இது தவிர, நாதஸ்வர & தவில் மங்கல இசையும் இசைக்கப்பட்டு வந்திருந்தோரை கவர்ந்தது.
தமிழரின் தற்காப்புக் கலையான சிலம்பம், பாரம்பரிய விளையாட்டுகளாக பல்லாங்குழி, தாயம் போன்றவையும் இடம்பெற்றன.
வருகையாளர்களின் நாவுக்கு சுவையாக, புத்தாண்டை ஒட்டி பல்வேறு இனிப்பு பண்டங்கள் தொடங்கி உணவுகள் வரை பரிமாறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.