
செபராங் பிறை, ஆகஸ்ட்-25 – பினாங்கு சுங்கை பாக்காப்பில் கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு, மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ முயற்சியில் சொந்த வீடு கிடைத்துள்ளது.
பாட்டி அமிர்தத்துடன் பள்ளி செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில், 7 வயது தர்ஷன் இடது கையில் நிரந்தர செயலிழப்புக்கு ஆளானார்; அவரின் 5 வயது தங்கை கவர்ஜிதா, முட்டி வரையிலான தனது இடது காலை இழந்தார்.
இந்த சிறு வயதிலேயே அந்த உடன்பிறப்புகள் படும் கஷ்டத்தை உணர்ந்த சுந்தரராஜூ, இருவருக்கும் நீண்ட கால அடிப்படையில் உதவ ஒரு முன்னேற்பாட்டினைச் செய்தார்.
சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளியின் ஒத்துழைப்புடன் பொது மக்களிடமிருந்து நன்கொடை திரட்டுவது, திரட்டப்படும் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு சொந்த வீட்டை வாங்குவது, எஞ்சிய பணத்தை அவர்களின் trust fund எனப்படும் அறங்காப்பு நிதியில் போடுவது என முடிவுச் செய்யப்பட்டது.
அனைவரின் ஒத்துழைப்பாலும், ஆகஸ்ட் 19 வரை 222,024 ரிங்கிட் நன்கொடை திரண்டது.
இதையடுத்து Bandar Tasek Mutiara அடுக்குமாடி குடியிருப்பில் RM42,000 ரிங்கிட் விலையில் A வகை Rumah Mutiaraku வீடு வாங்கப்பட்டு, வீட்டுப் பத்திரமும் அமிர்தத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
சுந்தரராஜூவுடன், மாநில-மாவட்ட கல்வி இலாகா அதிகாரிகள், சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளி தலைமையாசியர் சரவணன் அண்ணாமலை, தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் உள்ளிட்டோரும் அவ்வருகையில் இடம் பெற்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக, முதல் மாடியில் மின்தூக்கி அருகிலேயே அவ்வீடு ஒதுக்கப்பட்டது.
அமிர்தத்தின் வயதைக் கருத்தில் கொண்டு, தற்போதைக்கு Amanah Raya Berhad பெயரின் கீழ் வீடு பதிவுச் செய்யப்பட்டுள்ளது; பேரப்பிள்ளைகள் இருவருக்கும் 18 வயதானதும் வீட்டுரிமை நேடியாக பெயர் மாற்றம் செய்யப்படும்; இருவருக்கும் வீட்டில் சம பங்குண்டு என சுந்தரராஜூ கூறினார்.
அவ்வீட்டை விற்கவோ வாடகைக்கு விடவோ முடியாது என்பதையும் அவர் நினைவுப்படுத்தினார்.
வீடு வாங்கியது போக மீதமுள்ள 180,024 ரிங்கிட் பணம், அதே Amanah Raya Berhad-டின் பொறுப்பில் வைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மாதா மாதம் 1500 ரிங்கிட் அமிர்தத்திடம் வழங்கப்படும்.
இன்னும் இரு வாரங்களில் ஆவணங்கள் முழுமைப் பெற்றதும் செம்டப்பர் கடைசிக்குள் அமிர்தமும் அவரின் பேரப்பிள்ளைகளும் தற்போதுள்ள தனியார் வாடகை வீட்டிலிருந்து இந்த புது வீட்டுக்குக் குடிப்பெயருவர் என சுந்தரராஜூ சொன்னார்.
சொந்த வீடு கிடைக்கவும், பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ எடுத்துள்ள முயற்சிக்கு, பாட்டி அமிர்தம் கண்ணீர் மல்க நன்றிக் கூறினார்.