Latestமலேசியா

13வது மலேசியத் திட்டம்: இந்தியச் சமூக மேம்பாட்டுப் பிரிவு அமைக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன் வலியுறுத்து

கோலாலாபூர், ஜூலை-31,

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தாக்கல் செய்த 13-வது மலேசியத் திட்டத்தில் இந்தியச் சமூக பொருளாதார மேம்பாடுக்கான திட்டங்கள் முறையாக அமுலாக்கம் காண்பதை உறுதி செய்ய நாட்டில் 95 விழுக்காட்டுக்கும் மேல் இந்திய மக்கள் தொகையைக் கொண்ட 38 இடங்களில், சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு அமைக்கப்பட வேண்டும்.

ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பிரிவில், நகர்ப்புற மற்றும் ஊராட்சி நிறுவனங்களைச் சேர்ந்த திறமையான பணியாளர்கள பணியமர்த்தப்படலாம்; அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னேற்றத்தை ஒருங்கிணைக்க, கண்காணிக்க மற்றும் இயக்க அவர்கள் உதவுவார்கள் என்றார் அவர்.

இது, இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கட்டமைப்பிலிருந்து தனித்து செயல்பட வேண்டும்; ஆக்கரமான அமுலாக்கம் மற்றும் பொறுப்பேற்றலை இது உறுதிச் செய்யும் என அவர் சொன்னார்.

13-ஆவது மலேசியத் திட்டம் மற்றும் Indian Blueprint எனும் மலேசிய இந்தியர் பெருந்திட்டம் 2.0 ஆகியத் திட்டங்களின் நோக்கங்களுடன் இணைந்தத் திட்டங்கள் தொடர்ச்சியான மற்றும் நிலையான பயனை அடைவதை, இச்சிறப்புப் பிரிவு உறுதிச் செய்யும்.

இந்திய கலந்தாலோசனை மன்றத்தால் வரையப்பட்ட பரிந்துரைகள் டிசம்பர் 2024-ல் பொருளாதார திட்டமிடல் பிரிவிடம் ம.இ.கா முன்வைத்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13-ஆவது மலேசியத் திட்டத்தில் அவை சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கும் விக்னேஸ்வரன் நன்றித் தெரிவித்து கொண்டார்.

இவ்வேளையில், இந்திய ஆலோசக மன்றக் குழுவின் கீழ் ஒரு நிலையான சமூகப் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளையும் நிறுவப்பட வேண்டும்; இது சமூகப் பொருளாதாரப் மேம்பாட்டுக்கான அமைச்சரவைக் குழுவின் செயலகமாக செயல்பட வேண்டும் என்றார் விக்னேஸ்வரன்.

மலேசிய இந்தியச் சமூகத்தின் நல்வாழ்வுக்காக, இத்திட்டங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறுவதை உறுதிச் செய்ய, ம.இ.கா அரசாங்கத்துடனும் இன்னபிற தரப்புகளுடனும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!