
மலாக்கா , ஆகஸ்ட் 18 – ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புதர்களில் கண்டெடுக்கப்பட்ட தனது மனைவி மற்றும் வளர்ப்பு மகனைக் கொலை செய்ததற்காக சிங்கப்பூர் ஆடவருக்கு மலாக்கா உயர் நீதிமன்றம் 72 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதித்துள்ளது.
36 வயதான ஷாருல் நிஜாம் சுரைமிக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் 36 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்க நீதிபதி அன்செல்ம் சார்லஸ் பெர்னாண்டிஸ் ( Anselm Charles fernandis ) உத்தரவிட்டார் . 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து தண்டனைகள் தொடர்ச்சியாக அனுபவிக்கும்படி அந்த நபருக்கு உத்தரவிடப்பட்டது.
ஷாருலின் செயல்கள் கொடூரமானவை என்பதோடு , குற்றத்தையும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களையும் மறைக்கும் முயற்சியில் அவர் தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை அவர்களின் வீட்டின் கூரையில் வைத்ததாக நீதிபதி Anselm தீர்ப்பில் தெரிவித்தார். வாழ்க்கைக்கான வாழ்க்கை என்ற கருத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உணர்ச்சிகளையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
ஷாருல் தனது 27 வயதுடைய மனைவி நோர்பசெரா பிடின் (27) Norfazera Bidin, மற்றும் அவரது 11வயது மகன் இமான் அஷ்ராப் அப்துல்லா ( Iman Azraf Abdullah ) ஆகியோரை பத்து பெரெண்டம், தாமான் மெர்டேகா ஜெயாவில் உள்ள அவர்களது வீட்டில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணி முதல் அக்டோபர் 7, 2019 காலை 7.30 மணி வரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.