
கோலாலம்பூர், மார்ச்-21 – ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரத்தில் என்னமோ தங்களுக்குச் சம்பந்தமே இல்லாதது போல் DBKL பேசுவதாக பேராசிரியர் Dr ராமசாமி சாடியுள்ளார்.
உண்மையில் தற்போது நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் மூலக்கராணமே DBKLதான் என உரிமைக் கட்சியின் தலைவருமான அவர் குற்றம் சாட்டினார்.
2008-ல் அக்கோயிலை தற்போதுள்ள இடத்திற்கு மாறச் சொன்னதே DBKL தான்; இதன் மூலம் அந்நிலம் நிரந்தரமானது என்ற தோற்றம் உருவானது.
நிலைமை இவ்வாறிருக்க, 2014-ல் கோயில் நிர்வாகத்துக்குத் தெரியாமலேயே Jakel Trading ஜவுளி நிறுவனத்துக்கு அந்நிலத்தை விற்றதும் DBKL தான்.
இந்நிலையில் கோயில் இடமாற்றம் குறித்த பேச்சுவார்த்தைத் தொடருவதாகக் கூறப்பட்டது; ஆனால் அங்கு மசூதி கட்டப்படவிருக்கும் தகவல் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியிருப்பதாக ராமசாமி சுட்டிக்காட்டினார்.
130 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை DBKL தட்டிக் கழித்துள்ளது.
இப்போது மட்டும் கோயில் மீது அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்ளும் DBKL, இடமாற்றம் குறித்து பேசிசுகிறது.
ஆனால், இப்புதிய இடமாற்றம் கூட நிரந்தரமானது என்பதற்கு என்ன உத்தரவாதம் என ராமசாமி கேள்வி எழுப்பினார்.
DBKL பிரதமர் துறையின் நேரடி பார்வையின் கீழ் வருகிறது; அப்படியிருக்க, அக்கோயிலுக்கு நில உரிமைக் கிடைப்பதை உறுதிச் செய்வதை விடுத்து, இடமாற்றத்திற்கு வற்புறுத்துகிறது.
பாலஸ்தீன விவகாரத்தில் குரல் கொடுக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தக் கோயில் விவகாரத்தில் மௌனம் காப்பதாக Dr ராமசாமி குற்றம் சட்டினார்.
எனவே, இந்தக் கோயில் விஷயத்தில் DBKL தனது பொறுப்பை ஒப்புக் கொண்டு, நடந்த ‘பிழைகளை’ சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
பாரம்பரிய இடத்திலிருந்து அக்கோயிலை இடமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவது ஜனநாயகமற்ற நடவடிக்கையாகும்.
எனவே, ஆலயத்தின் இடமாற்றத்தை அன்வார் தடுத்து நிறுத்தப் போகிறாரா அல்லது அது இடமாற்றம் காண்பதை வேடிக்கைப் பார்க்கப் போகிறாரா என்பதை மக்கள் பார்க்க ஆவலுடன் இருப்பதாக ராமசாமி கூறினார்.