
கோலாலம்பூர், மே-7, இன்றைய பட்டதாரிகளின் ஆரம்ப சம்பளமே 7,000 முதல் 8,000 ரிங்கிட்டைத் தொட்டிருக்க வேண்டுமென பேங்க் நெகாரா ஆளுநர் தான் ஸ்ரீ மொஹமட் இப்ராஹிம் அண்மையில் கூறியிருந்தது, பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
தாங்கள் வாங்கும் சம்பளம் இன்றைய விலைவாசி மற்றும் வாழ்க்கைச் செலவினத்தை பிரதிபலிக்கவில்லை என ஆதாரத்துடன் ஆதங்கப்பட மக்களுக்கும் எல்லா உரிமையும் உண்டு.
ஆனால், கடந்த கால ஒப்பீடுகள் பற்றிக் பேசிக்கொண்டிருப்பதை விட, நிலைமையை மேம்படுத்த என்ன செய்யப்படுகிறது, என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி பேசுவதே சிறப்பாகும் என்கிறார் பிரபல கட்டுரையாளர் முஸ்தாபா அலி.
நாம் இன்னமும் பழைய சம்பள வட்டத்திற்குள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளோம் என்பது ஊரறிந்த இரகசியம்.
அரசாங்கமும் அதை இல்லையென்றுச் சொல்லவில்லை.
அந்நியத் தொழிலாளர்களையே அதிகம் சார்ந்திருப்பது, உயர் ஊதிய மற்றும் தரமான வேலைகளை ஏற்படுத்தத் தவறியது, கல்வி முறையில் காணப்படும் பலவீனங்கள் உள்ளிட்டவை அதற்குக் காரணம் என்பதை அரசாங்கமும் ஒப்புக் கொண்டுள்ளது.
அதனால் தான், மடானி பொருளாதார நடவடிக்கை பெருந்திட்டம் போன்ற கொள்கைகளின் கீழ், அரசாங்கம் உயர் தொழில்நுட்பத் தொழில்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்கிறது.
இது புதிய வேலைகளை உருவாக்குவதற்கான முயற்சி மட்டுமல்ல, அந்த வேலைகளுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சியும் ஆகும்.
குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தியது, TVET தொழில் பயிற்சி கல்விக்கு முக்கியத்துவம் போன்றவையும் கண்கூடு.
தவிர, நடுத்த வருமான அளவும் முதன் முறையாக 3,000 ரிங்கிட்டைத் தாண்டியுள்ளது.
சம்பளம் 8,000 வெள்ளியை இன்னும் தொடவில்லையே என ஏமாற்றத்தில் மூழ்குவதை விட, நியாயமான ஊதியம், தரமான வேலை, சமூக அந்தஸ்து போன்றவற்றை உறுதிச் செய்யும் அமைப்பு முறையை எப்படி ஏற்படுத்துவது என்பதே முக்கியம்.
நம் பிள்ளைகள் உண்மையிலேயே நியாயமான சம்பளத்தைப் பெற வேண்டுமென நினைத்தால், அனைவரும் பங்காற்ற வேண்டும்.
கொள்கை வகுப்பாளர்கள் தொடங்கி முதலாளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை மதிப்பு மீதான நம் போக்கு வரையில் மாற்றங்கள் நிகழ வேண்டும்.
இது எளிதான காரியமல்ல; என்றாலும் குறைந்தபட்சம் நாம் சரியான இலக்கை நோக்கிச் செல்கிறோம் என முஸ்தாபா நம்புகிறார்