
பாலிங், செப்டம்பர் 3 – முழுமையான உடையுடன் பால் வெட்டு தொழிலாளி ஒருவரது உடலின் எலும்புக் கூடு கோலாக்கெட்டில் கம்போங் பாடாங் பெசாரில் நேற்று காலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காலை 11 மணியளவில் ஆடவர் ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்ததாக பாலிங் மாவட்ட போலீஸ் இடைக்காலத் தலைவர் துணை சூப்பிரடெண்ட் அகமட் சல்மி முகமட் அலி ( Ahmad Salimi ) தெரிவித்தார்.
அந்த எலும்புக் கூடு கண்டுப்பிடித்த இடத்திலிருந்து 25 மீட்டர் தொலைவே நீல நிற மோட்டர் சைக்கிள் ஒன்றும் கண்டுப்பிடிக்கப்பட்டது. காலியான ஒரு டின்னின் மேல் கால் வைத்திருந்த நிலையில், இறந்து கிடந்த ஆடவரின் இடதுபுற பகுதியில் ஒரு கத்தியும் காணப்பட்டது.
அந்த ஆடவர் காணாமல்போனதாக கடந்த ஆகஸ்டு 29 ஆம் தேதி அவரது மனைவி போலீசில் புகார் செய்திருந்தார். ஆகஸ்டு 24ஆம் தேதி வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற தனது கணவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லையென அப்பெண் கூறியிருந்தார். அந்த எலும்புக்கூட்டில் காணப்பட்ட உடை மற்றும் அங்கு கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளை அடிப்படையாகக் கொண்டு அந்த உடல் அப்பெண்ணின் கணவர் என அடையாளம் காணப்பட்டது.