
கேன்பரா, டிசம்பர்-10 – TikTok, Instagram, Facebook, Snapchat, YouTube போன்ற முக்கிய சமூக ஊடகங்களை 16 வயதுக்குக் கீழ்பட்ட சிறுவர்கள் பயன்படுத்த முடியாத வகையில், உலகிலேயே முதல் நாடாக ஆஸ்திரேலியா தேசிய அளவிலான தடையை அதிகாரப்பூர்வமாக அமுல்படுத்தியுள்ளது.
இந்த வாரம் முதல் அமுலுக்கு வந்துள்ள இச்சட்டத்தின் கீழ், தொழில்நுட்ப நிறுவனங்கள் வயது குறைந்த புதியப் பயனர் கணக்குகளைத் தடுக்கவும், ஏற்கனவே உள்ள கணக்குகளை முடக்கவும் வேண்டும்.
இதைச் செய்ய தவறினால், அவற்றுக்கு அதிகபட்சம் 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்படும்.
இணையப் பகடிவதை, பாலியல் சீண்டல், மற்றும் மனநல பாதிப்புகள் போன்ற ஆபத்துகளிலிருந்து குழந்தைகளையும் பதின்ம வயது சிறார்களையும் பாதுகாப்பதே இந்த அதிரடி நடவடிக்கையின் நோக்கம் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
பெற்றோர் மற்றும் குழந்தை பாதுகாப்பு அமைப்புகள் இந்த தடையை பெரிதும் வரவேற்றுள்ளன.
ஆனால் தொழில்நுட்ப நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும், இந்த நடவடிக்கை அதிகக் கட்டுப்பாடானது என்பதோடு நடைமுறையில் அமுல்படுத்த சிரமமானது என்றும் விமர்சிக்கின்றன.
இது சிறுவர்களை பாதுகாப்பற்ற மாற்று தளங்களுக்குத் தள்ளக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த தடையை அமுல்படுத்திய முதல் நாடாக ஆஸ்திரேலியா திகழும் நிலையில் மேலும் பல நாடுகள் இதைப் பின்பற்ற பரிசீலித்து வருகின்றன.
குறிப்பாக மலேசியா அடுத்தாண்டு இத்தடையை அமுல்படுத்துகிறது.



