Latestமலேசியா

UPSR, PT3 தேர்வுகளை மீண்டும் கொண்டு வர வேண்டுமா? – கல்வி அமைச்சு ஆய்வு

புத்ராஜெயா,ஜனவரி 9 – ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான UPSR மற்றும் படிவம் 3 பயிலும் மாணவர்களுக்கான PT3 தேர்வுகளை, மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை கல்வி அமைச்சு ஆய்வு செய்யவிருப்பதாக அதன் அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வை மேற்கொள்ள தேசிய கல்வி ஆலோசனை மன்றத்திற்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. UPSR மற்றும் PT3 தேர்வுகள் தொடர்பான விவகாரம் தற்போது வரை சமூகத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் விவாதத்தில் இருந்து வருவதாக அவர் கூறினார்.

இந்த விடயத்தில் கல்வித் துறை தலைமை இயக்குநர் Azam Ahmad தனது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவார். அதன் பின்னர், ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை விரிவாக ஆய்வு செய்து கலந்துரையாடுவார்கள் என்றும் Fadhlina தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு, ஆய்வு முடிவுகள் தயாரானதும், இறுதி தீர்மானம் அமைச்சரவையில் ஒப்படைக்கப்படும்.

2021 ஆம் ஆண்டு UPSR தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், அதே ஆண்டில் PT3 தேர்வும் நிறுத்தப்பட்டது. பின்னர் 2022 ஆம் ஆண்டில் PT3 முற்றிலும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக பள்ளி அடிப்படையிலான மதிப்பீடு அதாவது PBS நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

UPSR மற்றும் PT3 தேர்வுகள் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் என்றும், அவை இல்லாததால் சில மாணவர்கள் SPM தேர்வில் பின்தங்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் சமூகத்தில் கருத்துக்கள் பரவி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!