
சிரம்பான், மார்ச்-21 – மார்ச் 24 முதல் ஏப்ரல் 7 வரை அனைத்து வகைக் கட்டுமானம், பராமரிப்பு, மேம்படுத்தல் மற்றும் சாலை பழுதுபார்க்கும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு, அனைத்து நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனங்களும் உத்தரவிடப்பட்டுள்ளன.
வழக்கத்திற்கு மாறான நெரிசலைத் தவிர்ப்பதும், பெருநாள் கால போக்குவரத்தை சீராக்குவதுமே அதன் நோக்கம் என பொதுப் பணித் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
அக்காலக்கட்டத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக பாதைகளை மூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆபத்து அவசர வேலைகளுக்கு அதில் விலக்கு அளிக்கப்படுவதாக அமைச்சர் சொன்னார்.
FT51 சிரம்பான் – குவாலா பிலா கூட்டரசு சாலையில் கூடுதல் பாதைகள் திறக்கப்பட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்த பிறகு டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் அவ்வாறு கூறினார்.
அந்நிகழ்வில் வீடமைப்பு – ஊராட்சி மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்கான நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜே.அருள் குமாரும் கலந்துகொண்டார்.