
கோலாலம்பூர், அக்டோபர் 31 –
புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (TEID) அறிவித்துள்ள 70 சதவீத அபராதத் தள்ளுபடி, ‘non-compoundable’ குற்றங்களுக்கு, அதாவது நீதிமன்றத்தில் தீர்க்க வேண்டிய குற்றங்களுக்குப் பொருந்தாது என்று மலேசிய காவற்துறையின் போக்குவரத்து பிரிவு இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசான் பஸ்ரி (Datuk Seri Mohd Yusri Hassan Basri) தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1 முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ள இந்த தள்ளுபடி, தற்போதுள்ள அபராத விகிதத்திற்கே பொருந்தும் என்றும், குறைந்தபட்ச தொகை 30 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது.
அபராதத் தொகையை MyDigital ID-இல் பதிவு செய்தவர்கள், MyBayar PDRM தளத்தின் மூலமாகவும், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட போக்குவரத்து நிலையங்கள் மற்றும் தபால் நிலையங்களிலும் செலுத்தலாம்.
அபராதத் தொகையை விரைவாகச் செலுத்துபவர்களுக்கு குறைந்த கட்டண விகிதம் வழங்கப்படும் என்பதால், பொதுமக்கள் டிசம்பர் 30க்குள் தங்கள் அபராதங்களைத் தீர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த முயற்சி அரசு மேற்கொண்டுள்ள போக்குவரத்து அபராத விகிதங்களையும், கட்டண முறைகளையும் மீளமைக்கும் திட்டத்துடன் இணைந்ததென்றும், இது அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் அறியப்படுகின்றது. இந்த புதிய திட்டம் “தாமதம் குறைவாக இருந்தால், செலவும் குறையும்” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது எனவும் யூஸ்ரி தெரிவித்தார்.



