
புதுடில்லி, செப்-23,
Kam Air பயணிகள் விமானத்தின் தரையிறங்கும் கியர் பகுதியில் ஒளிந்துகொண்டு 13 வயது சிறுவன் காபூலில் இருந்து டெல்லி சென்றடைந்தான். வட ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டுஸ் நகரத்தைச் சேர்ந்த அந்த சிறுவன் , டெல்லி அனைத்துலக விமான நிலைய ஓடுபாதையில் சுற்றித் திரிந்ததாகக் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டு பல மணி நேரம் விசாரிக்கப்பட்ட பின் அச்சிறுவன் , அதே விமானத்தில் காபூலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டான் . தாம் ஆர்வத்தில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அச்சிறுவன் தெரிவித்தான். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் டில்லியில் தரையிறங்கிய Kam Airline விமானத்தின் எவருக்கும் தெரியாமலேயே அந்த சிறுவன் பயணம் செய்திருப்பதாக இந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, விமான ஊழியர்கள் ஒரு சிறிய சிவப்பு நிற ஆடியோ ஸ்பீக்கரையும் கண்டுபிடித்தனர். அச்சிறுவன் ஈரானுக்குப் பயணிக்க விரும்பினான் என்றும், அவன் நுழைந்த விமானம் தெஹ்ரானுக்கு அல்ல, டெல்லிக்குத்தான் என்பது அவனுக்குத் தெரியாது என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அச்சிறுவன் காபூல் விமான நிலையத்திற்குள் பதுங்கி, பயணிகள் குழுவை பின்தொடர்ந்து சென்று, விமானத்தின் பின்புற சக்கரத்தில் – தரையிறங்கும் கியர் வைத்திருக்கும் பகுதியில் மறைந்துகொண்டதாக கூறப்படுகிறது.