
மாசாய், ஏப்ரல்-5 – நீர் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைக் காப்பாற்றாமல், வீடியோ எடுப்பதில் மும்முரமாக இருந்த ஓர் ஆடவர் வலைத்தளவாசிகளிடம் ‘வறுபட்டு’ வருகிறார்.
அச்சம்பவம் ஜோகூர், மாசாயில் கனமழையின் போது நிகழ்ந்துள்ளது.
வைரலான 1 நிமிடம் 36 வினாடி வீடியோவில், ஒரு சிறுவன் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்படுவது தெரிகிறது.
இன்னொரு சிறுவன் பக்கத்தில் சத்தமாக அழுதுகொண்டே, தன் தம்பியைக் காப்பாற்றுமாறு உதவிக் கோரி கூச்சலிடுகிறான்.
கால்வாயில் விழுந்த சிறுவன், நீரில் அடித்து வந்த கட்டையைக் கைப்பற்றி அதனை கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டான்.
ஒருவழியாக அங்கு வந்த பொது மக்கள் அச்சிறுவனைக் காப்பாற்றிக் கரைக்கு இழுத்தனர்.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், என்னதான் சிறுவன் உயிர் பிழைத்தது குறித்து நிம்மதி தெரிவித்தாலும், சம்பவத்தை முழுவதுமாக வீடியோ எடுத்த ஆடவரை சாடினர்.
சிறுவன் உயிருக்குப் போராடும் நேரத்தில், கூடுதலாக ஒரு கைக் கொடுத்து உதவாமல், வீடியோ எடுப்பது முக்கியமா என பலரும் கேட்டு வருகின்றனர்.
எங்கு எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற அடிப்படைக் கூடவா தெரியவில்லை என சிலர் சற்று உரத்த தொனியில் கேட்ட வேளை, இன்னும் சிலர் மனிதாபிமானம் இல்லையா என கண்டனம் தெரிவித்தனர்.