
கெரிக், மே-11 – கெரிக் அருகே கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை குட்டி யானையொன்று டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட குட்டியை கண்டு பதறிய தாய் யானை, லாரியை தள்ளி காப்பாற்ற முயன்றது.
அது முடியாமல் போகவே, ஓரடி கூட நகராமல் அங்கேயே 5 மணி நேரங்களுக்கும் மேலாக தாய் யானை காத்திருந்த காட்சி வைரலாகி, பார்ப்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னின் அதிகாரிகள் தாய் யானையை அப்புறப்படுத்த கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.
ஒருவழியாக இன்று காலை 9 மணிக்கு மயக்க ஊசியைச் செலுத்தி, தாய் யானையைக் காட்டுப் பகுதிக்கு அவர்கள் இழுத்துச் சென்றனர்.
காலை 11.30 மணி வரைக்குமான நிலவரப்படி, டிரேய்லருக்கு அடியில் சிக்கி இறந்துபோன குட்டி யானையை வெளியில் எடுக்கும் பணிகள் முழுமைப் பெறவில்லை.
எல்லா உயிர்களுக்கும் தாய்மை என்பது ஒன்று தான் என்பதை இத்துயரச் சம்பவம் காட்டுகிறது.
அதுவும் அன்னையர் தினமான இன்று, கண் முன்னே குட்டி இறந்ததை தாங்க முடியாத தாய் யானையின் பரிதவிப்பு, நம் மனதை நொறுக்குகிறது.